
- News18 Tamil
- Last Updated: March 02, 2021, 23:01 IST
- VETRIVEL News18 Tamil Nadu
கூட்டுறவு வங்கி நகை கடன் ரத்து செய்ததற்கான அரசாணையை தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். எந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு, மதுரையின் நான்கு தொகுதியிலும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன் என்றார்.
கூட்டணியில் இருந்து சரத்குமார் விளக்கியுள்ளாரா என்ற கேள்விக்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் போவார், வருவார். அவரைப் பற்றி கவலை இல்லை.நடிகர் என்ற முறையில் கூட கமலை பார்க்க சென்று இருக்கலாம் என தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகவில்லை ஏன்? என்று கேள்வி எழுப்பியதற்கு,"நகைக் கடன் ரத்து குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டு உள்ளார். அதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், என்று சொல்ல வந்தவர் சட்டென்று மழுப்பி அரசாணை வெளியிடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மீண்டும் ஆட்சி அமைந்த பின்னர் அரசாணை வெளியாகுமா என்று நாம் கேள்வி எழுப்பியவுடன், கோபப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, "இது என்ன கேள்வி? முதல்வர் அறிவித்து உள்ளார். அது எப்படியாவது நடைமுறைப் படுத்தப்படும். நகைக்கடன் ரத்து செய்ததற்கான அரசாணை குறித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய பின்னர் வெளியாகும்" என முடித்து விட்டு செய்தியாளர் சந்திப்பில் இருந்து எழுந்து சென்று விட்டார்.