
- News18 Tamil
- Last Updated: March 02, 2021, 21:46 IST
- VETRIVEL News18 Tamil Nadu
காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் சுற்றித்திரியும் ஒற்றை குரங்கிடம் சிக்கிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊரில் சுற்றி பலரையும் அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் அந்த குரங்கானது தெருவில் வருவோர், போவோரை துரத்தி கடித்து வருவதாகவும், தற்பொழுது வரை பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை கடித்து குதறி உள்ளதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதனால் அப்பகுதியினரும், நாய்களும் அந்த குரங்கை பார்த்தாலே அலறி அடித்து ஓடுகின்றனர். குரங்கை பிடிக்க வனத்துறையினருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
சிறுவனோ செய்வதறியாது சிலை போல் அமர்ந்திருந்தான். இருப்பினும் குரங்கு அச்சிறுவனை விடுவதாக இல்லை. சுமார் 7 நிமிடங்கள் வரை அச்சிறுவனை அசைத்தும், முத்தம் கொடுத்தும் பல விதங்களில் அச்சிறுவனை அசைக்க முயற்சி செய்தது.
சிறுவனோ குரங்கின் சேட்டைக்கு பிடிகொடுக்காமல் சிலை போல் அமர்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து குரங்கு தானாக சென்று விட்டது. அதனைத் தொடர்ந்து அச்சிறுவன் குரங்கிடம் இருந்து தப்பி ஓடியுள்ளான். இதனை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு நபர் இதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.