தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 17 விழுக்காடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் தேசிய அளவில் 74 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்,, பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத்தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வுக்கு மாநிலங்கள் வாரியாக விண்ணப்பித்தவர்கள் அடங்கிய பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 17 விழுக்காடு குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில், நடப்பாண்டில் ஒரு லட்சத்து 17502 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு முன்பு 2016-17ஆம் ஆண்டில் 88881 பேரும், 2017-18ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேரும் விண்ணப்பித்திருந்தனர். முதல் ஆண்டிலேயே தேர்வில் வெற்றி பெற முடியாது என்பதால் அடுத்தாண்டு நடைபெறும் தேர்வை எழுத மாணவர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட் ஆப் அதிகமாக இருப்பதும், ஆள்மாறாட்ட சம்பவங்களால் மாணவ, மாணவிகள் அதிருப்தியில் இருப்பதும் காரணமாக கருதப்படுகிறது. நடப்பாண்டு அதிகமாக மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 829 பேரும், உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 705 பேரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல், ராஜஸ்தானில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேரும், கர்நாடகாவில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 626 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய அளவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 74 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.